கடையை அடைக்க வற்புறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை


கடையை அடைக்க வற்புறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை
x

பா.ம.க. முழு அடைப்பு போராட்டம் எதிரொலியாக பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளதாகவும், கடையை அடைக்க வற்புறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர்

வடலூர்,

முழு அடைப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

ஆனால் மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் ஓடும், அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நேற்று இரவு வடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

இந்த முழு அடைப்பு போராட்டம் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான செயலாகும். இதை மீறி முழு அடைப்பு நடத்தப்படும் சூழல் இருக்குமானால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்களும், வர்த்தகர்களும், அச்சமின்றி தங்கள் பணியை வழக்கம்போல் தொடரலாம். இதற்காக நெய்வேலியை சுற்றி உள்ள போலீஸ் உட்கோட்டங்களில் பாதுகாப்பு பணியில் போலீஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு

கடையடைக்க செய்ய வேண்டும் என்று யாரேனும் கூறி வற்புறுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், இதற்காக முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

7 ஆயிரம் போலீஸ் குவிப்பு

இந்த பாதுகாப்பு பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி.க்கள் பாண்டியன் (விழுப்புரம்), பகலவன் (காஞ்சீபுரம்), கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உள்பட 8 போலீஸ் சூப்பிரண்டுகள்,11 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 21 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story