கோழி, மருத்துவ கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை; நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் எச்சரிக்கை


கோழி, மருத்துவ கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை; நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் எச்சரிக்கை
x

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுப்பொருட்களை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுப்பொருட்களை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

கடும் நடவடிக்கை

நெல்லை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், அண்டை மாநிலங்களில் இருந்து கோழி கழிவுகள், மீன் கழிவுகள், மருத்துவம், பிளாஸ்டிக் மற்றும் கட்டிட கழிவுகள் போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய கழிவுகளை யாரேனும் வாகனத்தில் ஏற்றி வந்து கொட்டினாலோ அல்லது ஏஜெண்டுகள் மூலம் கழிவுகளை வாகனத்தில் கொண்டு வந்து குழிதோண்டி புதைத்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீதும், இடத்தின் உரிமையாளர் மற்றும் டிரைவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

தமிழகத்தில் இருந்து கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு காய்கறி கொண்டு செல்லும் வாகனங்கள் அங்கு காய்கறிகளை இறக்கி விட்டு, திரும்பி வரும் போது வாகன உரிமையாளருக்கு தெரியாமல் கழிவுகளை கொண்டு வந்து நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டுகிறார்கள்.

புகார் அளிக்கலாம்

இவ்வாறு கழிவுகளை கொண்டு வந்தாலோ, உங்கள் பகுதியில் கொட்டினாலோ போலீசாருக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.

நெல்லை மாவட்டத்தில் 0462 -2906025 என்ற தொலைபேசி எண்ணிலும், 9952740740 என்ற செல்போன் எண்ணி லும் தென்காசி மாவட்டத்தில் 9489003324 என்ற செல்போன் எண்ணிலும், 9385678039 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 0461-2340200 என்ற தொலைபேசி எண்ணிலும், 9514144100 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 04652-220167 என்ற தொலைபேசி எண்ணிலும், 7010363173 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.


Next Story