காவல்துறையினருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தால் கடும் நடவடிக்கை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


காவல்துறையினருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தால் கடும் நடவடிக்கை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

காவல்துறையினருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இந்த நடவடிக்கை எடுத்த போலீசார் 7 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்த ஆதரவற்றோர் இல்லத்தை நடத்தி வந்த கலா, முத்துக்குமார் ஆகிய இரண்டு பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக காவல்துறையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறுவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும், இது போன்று ஆதாரம் இல்லாமல் காவல்துறையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கு காரணமாக காவல்துறையினர் தங்கள் சட்டபூர்வ கடமையை அமைதியான முறையில் மேற்கொள்ள முடியாமல் போகிறது என்றும் காவல்துறையினருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டால் அதன் உண்மை தன்மை குறித்து விசாரித்து அதன் பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தன்னுடைய உத்தரவில் வலியுறுத்தியுள்ளார்.

சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் போது ஏராளமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடிய காவல் துறையினர் தங்கள் கடமையை சுதந்திரமாகவும் நியாயமாகவும் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்ததுடன், குற்றம் சாட்டப்பட்ட ஏழு போலீசாருக்கும் தலா ரூ.5,000 வீதம் 35 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவாக மனுதாரர் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மேலும் இந்தத் தொகையை நான்கு வாரங்களில் காவல் ஆணையரிடம் வழங்க வேண்டும் என்றும் காவல் ஆணையர் அந்த தொகையை போலீசாருக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தன்னுடைய உத்தரவில் விளக்கியிருக்கிறார்.


Next Story