மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை


மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவம் சார்ந்த நிறுவனங்கள் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்தார்

விழுப்புரம்

விழுப்புரம்

கண்காணிப்புகுழு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து அப்புறப்படுத்துவது தொடர்பான கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் மோகன் பேசியதாவது:-

தொடர் கண்காணிப்பில்...

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி, மருத்துவத்துறை, வனத்துறை, மாசுகட்டுபாட்டு வாரியம் ஆகிய துறைகளின் மாவட்ட உயர் அலுவலர்கள் அடங்கிய மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளின் படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகள், ஆய்வகங்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை கூடங்களில் உருவாகும் மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து அப்புறப்படுத்தப்படுகிறதா? என தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

மேலும், மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளின் படி மனித உடற்கூறியல் கழிவு, விலங்கு உடற்கூறியல் கழிவு, காலாவதியானது அல்லது கைவிடப்பட்ட மருந்துகள், ரசாயன கழிவு, ரசாயன திரவ கழிவு, நுண்ணுயிரியல் பயோ டெக்னாலஜி மற்றும் இதர மருத்துவ ஆய்வக கழிவுகள் போன்ற கழிவுகளை மஞ்சள் நிற பைகளிலும், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் கையுறைகள், சிறுநீர்பைகள், டியூப்புகள் மற்றும் ஊசிகள் போன்றவற்றை சிவப்பு நிற பைகளிலும், கூர்மையான உலோகங்களின் கழிவுகளை வெள்ளை நிற பைகளிலும், கண்ணாடி பொருட்கள் மற்றும் அறுவை சிகிச்சை பொருட்கள் போன்றவற்றை நீல நிற பைகளிலும் பயன்படுத்த வேண்டும்.

கடும் நடவடிக்கை

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளும் அதில் உருவாகும் மருத்துவ கழிவுகள் அனைத்தையும் முறையாக பிரித்து, சேகரித்து மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். அனைத்து ஆஸ்பத்திரிகள், கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உரிய அனுமதி மற்றும் அங்கீகாரம் பெறுதல் வேண்டும்.

மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி மற்றும் கிளினிக்குகளில் இருந்து வெளியேறும் மருத்துவ கழிவுகளை கையாளும் மருத்துவ பணியாளர்களுக்கு, மருத்துவ கழிவுகளை கையாளும் முறை குறித்து சுழற்சி முறையில் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் குந்தவைதேவி, துணை இயக்குனர் பொற்கொடி, மண்டல பொறியாளர் செல்வக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story