கல்லூரியில் வெளிநபர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


கல்லூரியில் வெளிநபர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x

கல்லூரியில் வெளிநபர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தெரிவித்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த, 14-ந் தேதி மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் வெளிநபர்கள் சிலர் ஈடுபட்டனர். எனவே மாணவர்களிடையே தொடர்ந்து நடைபெறும் மோதல் சம்பவங்களை தடுக்க திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. அசரத் பேகம், திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் ஆகியோர் தலைமையில் நேற்று மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தெரிவித்ததாவது:-

மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து பதிவேடுகளை கல்லூரி நிர்வாகம் பராமரிக்க வேண்டும். 3 முறைக்கு மேல் தொடர்ந்து தவறான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்ய வேண்டும். மாதந்தோறும் கல்லூரியில் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற வேண்டும். கல்லூரி வளாகத்தில் வெளி நபர்கள் உள்ளே நுழைந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் வருவாய் ஆர்.டி.ஓ. அசரத் பேசுகையில், 'மாணவர்கள் சமூக ரீதியிலான மோதல்களில் ஈடுபட கூடாது. மேலும் மாணவர்களின் புகார்களை தெரிவிக்க கல்லூரியில் புகார் பெட்டி அமைக்கப்பட வேண்டும்' என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கல்லூரி முதல்வர், திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை, கல்லூரியின் பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story