சத்துணவு முட்டைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை


சத்துணவு முட்டைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Oct 2023 6:45 PM GMT (Updated: 1 Oct 2023 6:46 PM GMT)

சத்துணவு முட்டைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் பல்வேறு தனியார் ஓட்டல்கள், இனிப்பு கடைகள் உள்ளிட்ட கடைகளில் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதோடு, தரமற்ற உணவு பொருட்களை அழித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், சின்னசேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த ஓட்டலில் அரசின் முத்திரையிடப்பட்ட அரசால் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்க கூடிய சத்துணவு முட்டைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த முட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, அந்த ஓட்டல் உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.

நடவடிக்கை

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஓட்டலில் வேலை பார்த்து வந்த சபரி என்பவர் கடலூர் மாவட்டத்தில் இருந்து சத்துணவு முட்டைகளை வாங்கி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அரசின் விதிமுறைகளை மீறி சத்துணவு முட்டைகளை பயன்படுத்தியதால் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு வருவாய் துறையினர் மூலம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

எனவே குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்க கூடிய அரசின் சத்துணவு முட்டைகளை விற்பனை செய்தாலோ அல்லது வெளியிடங்களுக்கு எடுத்துச் சென்றாலோ சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சத்துணவு முட்டைகளை தனியார் உணவு நிறுவனங்கள் வாங்கினால் சட்ட ரீதியாக நிறுவன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story