புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் கூறினார்.
திருக்கோவிலூர்,
சாராய வேட்டை
திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் சந்தைப்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், திருக்கோவிலூர் போலீஸ் உட்கோட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில் அதிரடி சாராய வேட்டை நடத்தப்பட்டது. அப்போது 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 197 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 53 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. 738 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சாராய விற்பனை 99 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளது. வேறு ஏதேனும் இடங்களில் சாராய விற்பனை நடந்தால் என்னிடம் தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கடும் நடவடிக்கை
அதேபோல் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது 100 சதவீதம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனையை முற்றிலுமாக தடுப்பதற்கு பொதுமக்களின் ஆதரவும் மிகவும் முக்கியம். நாங்கள் கஞ்சா விற்பவர்கள் என பட்டியிலிடப்பட்ட அனைவரையும் கைது செய்து விட்டோம். மேலும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் டாஸ்மாக் கடைகளில் சில்லறை விற்பனைகள் மட்டுமே செய்யப்பட வேண்டும். பெட்டி, பெட்டியாக மதுபானங்கள் ஒரே நபருக்கு விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு சட்டத்துக்கு புறம்பான சம்பவங்கள் எங்கு நடந்தாலும் உடனே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவர் அவர் பேசினார்.