ரவுடிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை -டி.ஐ.ஜி. பொன்னி பேட்டி
காஞ்சீபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் ரவுடிகளை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம். ரவுடிகளை ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
காஞ்சீபுரம்,
என்கவுண்ட்டர் தொடர்பாக காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. பொன்னி நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சீபுரத்தில் பிரபாகரன் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளியை 4 பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்தது. இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரகு, அசேன் ஆகிய இருவரையும் பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் அவர்கள் இருக்கும் இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அவர்கள் போலீசாரை தாக்கியதால் தற்காப்புக்காக வேறு வழி இல்லாமல் துப்பாக்கியால் சுட நேரிட்டது. இதில் ரகு, அசேன் இருவரும் காயம் அடைந்தனர். ஆஸ்பத்திரிக்கு அவர்களை சிகிச்சைக்காக கொண்டு சென்றும் காப்பாற்ற முடியவில்லை. இவர்கள் இருவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த வழக்கில் மேலும் 2 பேரை தேடி வருகிறோம். காஞ்சீபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் ரவுடிகளை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம். ரவுடிகளை ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.