செய்யாறு பகுதிகளில் வயல்வெளியில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை


செய்யாறு பகுதிகளில் வயல்வெளியில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை
x

செய்யாறு பகுதிகளில் வயல்வெளியில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயற் பொறியாளர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை

செய்யாறு மின்வாரிய செயற் பொறியாளர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மழை, மின்னல், காற்றின் போது பொது மக்கள் மின்கம்பம், மின்பாதை, மின்மாற்றி அருகில் நிற்கவோ, செல்லவோ கூடாது. மின்மாற்றிகளிலோ அல்லது மின்கம்பத்திலோ பழுது ஏற்பட்டால் உரிய அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி சரிசெய்து கொள்ள வேண்டும். அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடவும் கூடாது. அருகில் செல்லவும் கூடாது.

மின்பாதைக்கு அருகிலோ, பக்கவாட்டிலோ, மின்பாதைக்கு கீழாகவோ எவ்வித கட்டிடப் பணியும் மேற்கொள்ளக் கூடாது. அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு கட்டிட உரிமையாளரே முழு பொறுப்பு ஆவார். பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் விழாக் காலங்களில் கம்பத்திலோ, மின்பாதைக்கு கீழாகவோ பேனர் தட்டிகள் மற்றும் கொடிகள் போன்றவற்றை கட்டக்கூடாது. அதனால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு அவரவரே முழு பொறுப்பாவார்கள்.

வீட்டில் துணியை காயப்போடுவதற்காக கட்டும் கயிற்றின் மீது எந்த ஒரு மின் ஒயரையும் சுற்றி எடுத்துச் செல்லக்கூடாது. வயல்வெளிகளில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சவ ஊர்வலத்தின் போது பூ மாலைகளை மின்பாதையின் மேல் வீசக்கூடாது. மின் பழுது, மின் மீட்டர் அளவு குறைபாடுகள் மற்றும் விபத்து குறித்து கட்டணமில்லா சேவை எண் 94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story