வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் குரங்குகளுக்கு உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை-சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை


வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் குரங்குகளுக்கு உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை-சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 27 Sep 2023 7:30 PM GMT (Updated: 27 Sep 2023 7:30 PM GMT)
கோயம்புத்தூர்


வால்பாறை


வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் குரங்குகளுக்கு உணவு வழங்கும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.


உணவுக்காக காத்திருக்கும் குரங்குகள்


வால்பாறை வனப்பகுதியில் யானை, மான், குரங்கு, காட்டெருமை, சிறுத்தை, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் தற்போது குரங்குகள் உணவுக்காக வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை சாலையோரத்தில் உள்ள தடுப்புச்சுவர்களில் அமர்ந்து உள்ளன. இந்த குரங்குகளுக்கு திண்பண்டங்களை போட வேண்டாம் என்று வனத் துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழியாறு வனத் துறை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வருகிறது. ஆனாலும் சுற்றுலா பயணிகள் குரங்குகளின் சேட்டைகளை கண்டு ரசிப்பதற்காகவும், அருகில் வரவழைத்து புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுப்பதற்காகவும் ஆர்வம் கொண்டு குரங்குகளுக்கு திண்பண்டங்களை தொடர்ந்து போட்டு வருகின்றனர். இதனால் குரங்குகள் வனப்பகுதியில் உணவைத்தேடாமல் சுற்றுலா பயணிகள் உணவு அளிப்பார்கள் என்று தடுப்புச்சுவர்களில் நீண்ட நேரமாக காத்துக்கிடக்கின்றன.


உணவு பழக்கத்தில் மாற்றம்


அப்போது ஒருசில குரங்குகள் வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து வனவிலங்குகள் ஆர்வலர்கள் கூறியதாவது:- கடந்த பல ஆண்டுகளாக வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் பலர் குரங்குகளுக்கு திண்பண்டங்களை போட்டு வந்ததால் அவைகளின் உணவு பழக்கத்தில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. வனப் பகுதியில் கிடைக்கும் இலை, தலை மற்றும் பழங்களை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்துடன் வனப் பகுதியில் சுற்றித்திரிந்து வாழ்ந்து வந்த குரங்குகள், தற்போது சுற்றுலா பயணிகள் போடக்கூடிய மிக்சர், முறுக்கு, இறைச்சி, எண்ணெயில் வறுத்த உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் உட்பட அனைத்து வகையான உணவுப் பொருட்களையும் சாப்பிட்டு பழகி விட்டது.


இதனால் அவைகளின் உணவு பழக்கத்தில் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.


கடும் நடவடிக்கை


மேலும் சுற்றுலா பயணிகள் தின்பண்டங்களை போடும் போது அவைகளை தூக்கிக் கொண்டு ஓடும் போது வாகனங்களில் அடிபட்டு பல குரங்குகள் உடல் ஊனத்துடன் சுற்றித்திரிந்து வருவதை காணமுடிகிறது. அதனால் சுற்றுலா பயணிகள், குரங்குகளுக்கு உணவளிப்பதை கைவிட வேண்டும். மேலும் வனத்துறையினர் கண்காணித்து, குரங்குகளுக்கு உணவு அளிக்கும் சுற்றுலா பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், குரங்குகள் இயற்கையாகவே வனப்பகுதியில் உணவு தேடி உண்டு வாழ்ந்து வருகிறது. அதனால் சுற்றுலா பயணிகள், குரங்குகளுக்கு உணவு வழங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் குரங்குகளுக்கு உணவு அளிக்கும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.



Next Story