ஆற்காடு குப்பம் அருகே கொசஸ்தலை ஆற்றில் வருவாய்த்துறையினர் ஆய்வு மணல் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை


ஆற்காடு குப்பம் அருகே கொசஸ்தலை ஆற்றில் வருவாய்த்துறையினர் ஆய்வு மணல் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
x

ஆற்காடு குப்பம் அருகே கொசஸ்தலை ஆற்றில் வருவாய்த்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மணல் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

திருவள்ளூர்

ஆந்திர மாநிலத்தில் உருவாகும் கொசஸ்தலையாறு திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவாலங்காடு, பூண்டி ஒன்றியம் வழியாக பாய்ந்து சென்னை வரை செல்கிறது. இதன் நீளம் 134 கி.மீ., இந்த ஆறு சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. இந்நிலையில் திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடுகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பங்களாதோட்டம் அருகில் கொசஸ்தலையாற்றில் இரவு நேரங்களில் பொக்லைன் எந்திரம் வாயிலாக, லாரி, டிராக்டர் மூலமாக மணல் திருட்டு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. ஆற்றில் தொடர்ந்து மணல் திருடப்படுவதால், ஆற்றின் வழித்தடம் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று திருத்தணி தாசில்தார் மதன் உத்தரவின் பேரில் கனகம்மாசத்திரம் வருவாய் ஆய்வாளர் ஜீனத்சபீரா, கிராம நிர்வாக அலுவலர்கள் லட்சுமி, இளங்கோவன், சிவகுமார் ஆகியோர் மணல் கொள்ளை நடைபெற்ற கொசஸ்தலை ஆற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்து வருகிறோம். விரைவில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் ஆய்வாளர் தெரிவித்தார்.

பின்னர் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் அனுமதியின்றி அப்பகுதியில் உள்ள சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் முள்வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற அதிகாரிகள் முள்வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினார். உடனடியாக நடப்பட்டுள்ள கம்பங்களை அகற்றுமாறு வருவாய் ஆய்வாளர் ஜீனத்சபீரா உத்தரவிட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story