வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஜவுளி துறையினர் முடிவு
பஞ்சு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தக்கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாமா? என்று ஜவுளித்துறையினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
பஞ்சு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தக்கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாமா? என்று ஜவுளித்துறையினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
வேலை நிறுத்தம்
மின் கட்டண உயர்வால் ஜவுளித்துறை முற்றிலும் முடங்கிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கழிவு பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்தவும், மின் கட்டணத்தை குறைக்கவும் வலியுறுத்தி கடந்த 5-ந் தேதி முதல் ஓ.இ. நூற்பாலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பு மாநிலத்தலைவர் ஜெயபால் கூறியதாவது: -
பருத்தி விலை உயர்வு காரணமாக கழிவுபஞ்சு விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ கழிவு பஞ்சு ரூ.110 வரை உயர்ந்து உள்ளது. இந்த விலைக்கு இணையாக ஓ.இ. நூல் உற்பத்தி செய்து கொடுக்க முடியவில்லை. சமீப காலமாக பருத்தி விலை குறைந்தாலும் கழிவுபஞ்சு விலை மட்டும் குறையவில்லை. தமிழகத்தில் 5 சதவீதம் மட்டுமே பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 95 சதவீதம் வட மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோவிற்கு ரூ.7 முதல் ரூ.10 வரை கூடுதல் செலவாகிறது. இதற்கிடையே நாங்கள் தயாரிக்கும் ஜவுளிகளுக்கு தமிழ்நாட்டில் சாயம் இடுவதற்கு அதிக செலவாகிறது. வட மாநிலங்களில் சாயம் இடுவதற்கு கட்டணம் குறைவு. இதனால் மீண்டும் ஜவுளிகளை வட மாநிலங்களுக்கு அனுப்புகிறோம். ஜவுளிகளை அனுப்புவதற்கான வாடகையால் எங்களுக்கு கூடுதல் செலவாகிறது.
மின்கட்டணம் உயர்வு
இதற்கிடையே தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மின் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். மின் கட்டணத்தை குறைத்தால் மட்டுமே ஜவுளி தொழில் நடத்த முடியும்.
தற்போது உள்ள சூழ்நிலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.20 வரை நஷ்டம் ஏற்படுகிறது. மின் கட்டண உயர்வு குறையாமல், கழிவுப்பஞ்சு விலை குறையாமல் ஓ.இ. நூல் மில்களை இயக்க முடியாது. எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். உற்பத்தி நிறுத்தத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் ரூ.40 கோடி உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் பஞ்சு கிலோ 152 ரூபாய்க்கும், கழிவுபஞ்சு 112 ரூபாய்க்கும் விலை உயர்ந்து உள்ளது. ஆனால் நாங்கள் உற்பத்தி செய்யும் ஜவுளி துணிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
இதற்கிடையே விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட ஜவுளி தொழில் துறையினர் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரியும் வலியுறுத்தி ஒட்டுமொத்த வேலை நிறுத்தம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இன்று (வெள்ளிக்கிழமை) ஜவுளித்துறை குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கைத்தறித்துறை அமைச்சர் காந்தி மற்றும்ஜவுளித்துறை, மின்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளதாகவும், அதில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்க ஜவுளி துறையினருக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் ஜவுளி துறையினர் தெரிவித்தனர்.