பாப்பாரப்பட்டியில், தார்சாலையை அகற்ற எதிர்ப்பு:பொதுமக்கள் சாலை மறியல்


பாப்பாரப்பட்டியில், தார்சாலையை அகற்ற எதிர்ப்பு:பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 July 2023 1:00 AM IST (Updated: 22 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

தார்சாலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பாப்பாரப்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

பாப்பாரப்பட்டி சின்ன ஏரி சுமார் 35 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் கட்டிட இடிபாடுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டியும், ஆக்கிரமித்தும், ஆகாயத்தாமரை வளர்ந்தும் இருந்தது. இதனை தூர்வாரி ஏரியை மேம்படுத்தி கரையை பலப்படுத்திட ரூ.2.23 கோடியில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஏரி வழியாக செல்லும் தார்சாலை ஏரி மேம்பாட்டு பணிக்காக தோண்டப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை பாப்பாரப்பட்டி பழைய பஸ் நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா, துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி, பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

நீண்ட நேரம் பேசியும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தார்ச்சாலை அகற்றாமல் ஏரி மேம்பாட்டு பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story