கலைஞர் மகளிர் உரிமை திட்ட அலுவலக ஊழியர்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு


கலைஞர் மகளிர் உரிமை திட்ட அலுவலக ஊழியர்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு
x

கலைஞர் மகளிர் உரிமை திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தாசில்தார் அலுவலக ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்

கலைஞர் மகளிர் உரிமை திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தாசில்தார் அலுவலக ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மகளிர் உரிமைத்திட்டம்

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பெண்களிடம் விண்ணப்பங்களை பெற்று அவற்றை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியில் இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

திருப்பூர் வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் 360 பேர் இந்த பணிகளில் ஈடுபட்டனர். இவர்கள் அதிகபட்சம் 22 நாட்கள் வரை பணியாற்றியதாக தெரிகிறது. இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.350 வீதம் சம்பளம் வழங்கப்படும் என்று கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று அவரவர் செல்போன் எண்களுக்கு நேற்று முன்தினம் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.

முற்றுகை

இதைத்தொடர்ந்து நேற்று காலை திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் 350-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.

அப்போது அலுவலக ஊழியர்கள், கணினியில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தலா ரூ.8 வீதம் கணக்கிட்டு பணம் வந்துள்ளது என்றும், பயிற்சி வகுப்புக்கான ரூ.350 வரவில்லை என்றும் கூறியதாக தெரிகிறது. இதனால் வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதன்காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கணினியில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்த கட்டணம் மட்டும் வழங்கப்படும் என்று தெரிவித்து ஊழியர்கள் மூலமாக பணம் உடனடியாக பட்டுவாடா செய்யப்பட்டது.

சம்பளம் பட்டுவாடா

இதுகுறித்து வடக்கு தாசில்தார் மகேஸ்வரன் கூறும்போது, 'விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தவர்களுக்கு மொத்தம் ரூ.14 லட்சத்து 70 ஆயிரம் வந்துள்ளது. அவர்களுக்கு விண்ணப்ப படிவம் ஒன்றுக்கு ரூ.8 வீதம் கணக்கிட்டு அவரவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக அலுவலக ஊழியர்கள் 5 குழுவாக பிரித்து பட்டுவாடா செய்யப்பட்டது. பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.350 வழங்குவது குறித்து இன்னும் அறிவிப்பு வரவில்லை. அவ்வாறு வந்தால் அவரவர் வங்கிக்கணக்கில் பட்டுவாடா செய்ய இருக்கிறோம்' என்றார்.


Related Tags :
Next Story