பஸ் டிரைவர் மீது வழக்கு பதிந்ததை கண்டித்து சிதம்பரத்தில் அரசு பஸ் டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தம் பயணிகள் கடும் அவதி
பஸ் டிரைவர் மீது வழக்கு பதிந்ததை கண்டித்து சிதம்பரத்தில் அரசு பஸ் டிரைவர்களின் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
சிதம்பரம்,
புதுச்சத்திரம் அடுத்த பெரியபட்டு சிறிய பாலம் அருகே அரசு பஸ், லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 35 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார், அரசு போக்குவரத்து கழக டிரைவர் கணேசமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். இது போக்குவரத்து கழக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனவே, சிதம்பரம் கிளை அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு ஒன்று திரண்டு சென்று போலீசாரிடம் இதுகுறித்து கேட்டனர். அப்போது, அரசு பஸ் டிரைவர் மீது எந்தவித தவறும் இல்லை. லாரி டிரைவர் தான் அதிவேகமாக வந்து மோதியுள்ளார் என்று தெரிவித்தனர். ஆனால் போலீசார், பஸ் டிரைவர் மீது தான் தவறு இருப்பதாக கூறியதாக தெரிகிறது.
திடீர் வேலை நிறுத்தம்
இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து தொழிலாளர்கள், போலீசார் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக கூறி, சிதம்பரம் கிளை பணிமனையில் இயங்கும் அரசு பஸ்கள் அனைத்தையும் நேற்று மதியம் 2.30 மணிக்கு மேல் நிறுத்திவிட்டு, திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சிதம்பரம் பஸ்நிலையத்தில் இருந்த பஸ்கள் அனைத்தும் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், சிதம்பரம் பஸ்நிலையத்துக்கு வந்த பஸ்கள், பயணிகளை அங்கு இறக்கிவிட்டு, பணிமனைக்கு ஓட்டி செல்லப்பட்டது. இதனால் வெளியூர் செல்ல வந்த பயணிகள், கிராமங்களுக்கு செல்ல வேண்டிய மக்கள் பஸ் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டனர். பஸ்நிலைய பகுதி பஸ் ஏதும் இல்லாமல் வெறிச்சோடியது.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் பஸ்நிலையத்துக்கு வந்து, அங்கிருந்த போக்குவரத்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், தொழிலாளர்கள் தரப்பில், விபத்து தொடர்பாக லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.
இதை கேட்டறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், விபத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையேற்று அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இதனால் சுமார் 3 மணி நேரத்துக்கு பின்னர் அரசு பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் ஓடின.
மீண்டும் போராட்டம்
போராட்டம் முடிவில் தொ.மு.ச. கடலூர் மண்டல பொது செயலாளர் தங்க ஆனந்தம் கூறுகையில், பஸ் டிரைவர் கணேசமூர்த்தி மீதான வழக்கை ரத்து செய்து, லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால், நாளை (அதாவது, இன்று) மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.இந்த சம்பவத்தால் சிதம்பரத்தில் பரபரப்பு நிலவியது.