அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தர்மபுரி:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் புகழேந்தி, மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் இளவேனில், சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராசன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சங்கர் உள்பட பல்வேறு அரசு துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்பட அரசு துறைகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய கல்விக்கொள்கையை கைவிடவேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த தர்ணா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.