மின்கம்பம் அமைக்க எதிர்ப்பு தொிவித்து சாலை மறியல் போராட்டம்
நல்லம்பள்ளி அருகே மின்கம்பம் அமைக்க எதிர்ப்பு தொிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே தடங்கம், எ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சந்திப்பு பகுதியில் விஜியா நகர் குடியிருப்பு உள்ளது. இந்த வீதியில் நேற்று ஒரு வீட்டின் மேற்கூரை பகுதியில் செல்லாமல் இருக்கும் வகையில் மின் கம்பத்தை மாற்றி அமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் இணைந்து தற்போது மாற்றம் செய்து மின்கம்பம் நடுவதை தவிர்த்து மாற்று இடத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர். தர்மபுரி-சேலம் பைபாஸ் சாலையில் இருபுறமும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தாசில்தார் சரவணன், அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மறியலில் ஈடுபட்டவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதுடன், தற்போது அமைக்கும் மின் கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் அமைத்து தரப்படும் என உறுதி அளித்தனர். பின்னர் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.