ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
வேலை நிறுத்த போராட்டம்
பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். அரசு பணியாளர்களுக்கு வழங்கும் 31 சதவீத அகவிலைப்படியை ரேஷன் கடை பணியாளர்களுக்கும் அளிக்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் புதிய 4 ஜி விற்பனை முனையம் வழங்க வேண்டும். மோடம் வழங்கப்பட்டு இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை ரேஷன்கடை பணியாளர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினார்கள். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ரேஷன் கடை பணியாளர்கள் பங்கேற்றனர். இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் ரேஷன் கடைகளில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. அதே நேரத்தில் கணிசமான ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ரேஷன் கடை பணியாளர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகரன், மாநில செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட நிர்வாகிகள் சுகதேவ், சாரதி, ஜான் ஜோசப் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். ஊதியம் மற்றும் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் தொகை குறித்த விவரங்களை பட்டியலாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ரேஷன் கடை பணியாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.