வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
சிங்கம்புணரி அடுத்த அ.காளாப்பூரில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அடுத்த அ.காளாப்பூரில் உள்ளது எட்டுக்கரை பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கொக்கன் கருப்பர் கோவில். இக்கோவில் இடம் அரசுக்கு சொந்தமானது எனவும், நீதிமன்றம் கட்டுவதற்காக பணிகளை அரசு தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிந்த எட்டுக்கரை பங்காளிகள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். நேற்று முன்தினம் வருவாய் துறையினர் அளவிடும் பணியை மேற்கொண்டபோது எட்டுக்கரை பங்காளிகள் அங்கு சென்று பணியை நிறுத்தக்கோரி மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி கோவில் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கோவிலுக்கு தேவையான குறிப்பிட்ட அளவு இடம் ஒதுக்குவதாகவும், மீதமுள்ள இடத்தில் அரசு கட்டிடம் கட்டிக்கொள்வதாகவும் கூறினார். இதுகுறித்து அனைவரும் கலந்து ஆலோசித்து முடிவு கூறுங்கள் என கூறி சென்றார். ஆனால் அதை ஏற்காத எட்டுக்கரை பங்காளிகள் நேற்று கோவில் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மேலும், வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டும், அரை நிர்வாணத்துடனும் போராட்டம் நடத்தினர்.