சாலையில் நாற்று நடும் போராட்டம்
சாலையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியன் கே.பெத்தானேந்தல் ஊராட்சியில் உள்ளது மணல்மேடு கிராமம். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் நிரம்பி காட்சியளிப்பதால் கிராம மக்கள் கடும் அவதியடைந்தனர். பெரியார் பஸ் நிலையத்திலிருந்து மணல்மேடு கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் தினமும் 4 முறை வந்து செல்லும். சாலை சேதமடைந்து உள்ளதால் தற்சமயம் 2 முறைதான் வந்து செல்கின்றது. இந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை மனுகொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் சாலையை சீரமைக்கக்கோரி பா.ஜனதா கட்சியின் திருப்புவனம் மேற்கு ஒன்றிய தலைவர் ராஜகதிரவன் தலைமையில் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்த முயன்றனர். இதில், மாவட்ட செயலாளர் மீனாதேவி, மாநில மகளிர் அணி செயலாளர் ஜெயமணி, ஒன்றிய பொதுச்செயலாளர்கள் பிரித்திவிராஜன், பிரபுசுப்பிரமணியன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது திருப்புவனம் தாசில்தார் கண்ணன், பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மே மாதம் 31-ந்தேதிக்குள் சாலைப்பணிகள் முடிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.