3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திஅங்கன்வாடி ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டம்
3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்
சிவகங்கை
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் குழந்தைகள் வருகையை கணக்கில் கொண்டு பிரதான மையங்களை மினி மையமாக மாற்றுவதை கைவிட வேண்டும், ஊட்டச்சத்து மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்களை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் விடுமுறை வழங்க கோரியும் ஏற்கனவே 2 கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
தற்பொழுது 3-வது கட்டமாக சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொடர் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெயமங்களம் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாக்கியமேரி கோரிக்கைகளை விளக்கி பேசினார். போராட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த சேதுராமன், வீரய்யா, கண்ணதாசன், உமாநாத், சின்னப்பன், முருகானந்தம், வேங்கய்யன்நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.