அரசு மதுக்கடையை பூட்டியதை கண்டித்து டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம்
அரசு மதுக்கடையை பூட்டியதை கண்டித்து டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை நகர் பழைய மருத்துவமனை அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடை, தனியார் மதுபானக்கூடம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அரசு டாஸ்மாக் கடை பூட்டப்பட்டது. தனியார் மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ. அமைப்பு) சார்பில் ஏற்கனவே 2 கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் அரசு கடையை பூட்டிய நிலையில் தனியார் டாஸ்மாக் கூடத்தை நடத்த அனுமதிப்பதை கண்டித்து சிவகங்கை டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
அரசு மதுபான கடையும் திறக்க வேண்டும் அல்லது தனியார் மதுபான கூடத்தை பூட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த போராட்டத்தில் சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் திருமாறன், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் பாண்டி, மாவட்ட துணைச்செயலாளர் மெய்யப்பன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சேதுராமன், மாவட்ட துணை தலைவர் கண்ணன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்குமார், பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.