கருணாநிதியின் பெயரை கருப்பு மை பூசி பா.ஜனதாவினர் அழித்ததால் பரபரப்பு. எம்.எல்.ஏ., மேயர் தலைமையில் தி.மு.க.வினர் போராட்டம்


கருணாநிதியின் பெயரை கருப்பு மை பூசி பா.ஜனதாவினர் அழித்ததால் பரபரப்பு. எம்.எல்.ஏ., மேயர் தலைமையில் தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2023 10:45 AM IST (Updated: 4 Jun 2023 10:45 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது, அவரது பெயரை கருப்பு மை பூசி அழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து எம்.எல்.ஏ., மேயர் தலைமையில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

கருணாநிதி பெயர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் காலனியில், ஆர்.வி.அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தை, ஓசூரை சேர்ந்த மறைந்த சமூக ஆர்வலர்கள் ராம்பிரகாஷ்-விஜயலட்சுமி தம்பதியினர், மாணவர்களின் பயன்பாட்டுக்காக தானமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த மைதானத்தில் மாணவர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதுடன், நாள்தோறும் ஏராளமான பொதுமக்களும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த விளையாட்டு மைதானத்திற்கு 'முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி விளையாட்டு திடல்' என்று பெயர் சூட்ட, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவந்து, அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, விளையாட்டு மைதானத்தில் அவரது பெயரில் புதிய பெயர் பலகையை திறந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

பா.ஜனதாவினர் எதிர்ப்பு

இந்நிலையில், அந்த விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட பா.ஜனதாவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விளையாட்டு மைதானம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கி பேசினார். விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாநில இணை அமைப்பாளர் விஷ்ணுகுமார், பா.ஜனதா மாநில வர்த்தக பிரிவு துணைத்தலைவர் சுதா நாகராஜன், விஜயகுமார் ஆகியோர் பேசினர். இதில், மாநில தொழில் பிரிவு செயலாளர் கே.ராமலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் பிரவீன் குமார், மாவட்ட பொருளாளர் சீனிவாசன் மற்றும் கட்சியினர் திரளாக கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த நிலையில், திடீரென பெயர் பலகையில் கருணாநிதி பெயரை, கருப்பு மையை பூசி அழிக்கும் பணியில் பா.ஜனதாவை சேர்ந்த 2 பேர் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, மை குப்பியை பறிமுதல் செய்தனர். மேலும், கருப்பு மையால் பெயர் அழித்தவர்களை போலீசார் அடிக்க முயன்றதால், கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பும், வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அதன்பிறகு பா.ஜனதாவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தி.மு.க.வினரும் போராட்டம்

இது குறித்து அறிந்த ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் உடனடியாக அங்கு விரைந்து வந்து நடந்த சம்பவங்கள் குறித்து டவுன் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசாரிடம் கேட்டறிந்தார். இதனிடையே பெயர் பலகையில் கருணாநிதி பெயர் அழிக்கப்பட்ட தகவல் அறிந்து, தி.மு.க. மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் சத்யா ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர்.

மேலும் விளையாட்டு மைதானம் முன்பு தரையில் அமர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. மற்றும் மேயரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெயர் அழிப்பு செயலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்துள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதையடுத்து, தி.மு.க.வினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் ஓசூரில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story