மின் கட்டணத்தை செலுத்தாமல் போராட்டம்


மின் கட்டணத்தை செலுத்தாமல் போராட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மின் கட்டணத்தை செலுத்தாமல் போராட்டம்

கோயம்புத்தூர்

கருமத்தம்பட்டி

விசைத்தறிகளுக்கு உயர்த்திய கட்டணத்தை ரத்து செய்யும் வரை மின் கட்டணத்தை செலுத்தாமல் தொடர்ந்து போராடுவோம் என விசைத்தறியாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விசைத்தறி கூட்டமைப்பு கூட்டம்

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் சங்க கூட்டமைப்பு கூட்டம் சோமனூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சோமனூர் சங்க தலைவர் சி.பழனிசாமி தலைமை தாங்கினார். அவிநாசி சங்கத் தலைவர் என்.எம்.முத்துசாமி, தெக்கலூர் சங்கத் தலைவர் பி. பொன்னுச்சாமி, சோமனூர் சங்க பொருளாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தற்போதைய தொழில் நிலவரம் குறித்து பேசப்பட்டது.

அதனை தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழக அரசு சாதா விசைத்தறிக்கு (3 ஏ-2) டேரிப்பிற்கு உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்கும் வரை மின் கட்டணம் செலுத்துவதில்லை என கடந்த 100 நாட்களாக போராடி வருகிறோம். ஆனால் அரசு இதுவரை நல்ல முடிவு எடுக்காமல் இருப்பது வேதனையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. அரசு உயர்த்திய மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை விசைத்தறியாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மின் கட்டணத்தை தொடர்ந்து கட்டாமல் போராட வேண்டும்.

அடுத்த கட்ட நடவடிக்கை

விசைத்தறியாளர்கள் கடந்த 8 ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லாமலும் குறைந்த பட்ச கூலி உயர்வை அரசு அறிவித்தும் அதை முழுமையாக அமல்படுத்தாமல் இருக்கும் நிலையில் தொழிலே நடத்த முடியாமல் தத்தளித்து வருகிறோம். எனவே சாதா விசைத்தறி தொழிலை பாதுகாக்குமாறு அரசை கேட்டுக் கொள்வது, தற்போதைய நிலை நீடித்தால் தறிகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே அரசு நல்லதொரு முடிவை அறிவிக்காவிட்டால் விசைத்தறிகள் முழுவதையும் நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

அரசு உடனடியாக உயர்த்திய மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து சாதா விசைத்தறி தொழிலையும், வறுமையில் வாடும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும். இந்த நிலை நீடித்தால் இரு மாவட்ட பொதுக்குழுவை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




Next Story