பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
சீர்காழி கழுமலை ஆறு பாசன வாய்க்காலில் கழிவுநீர் விடுவதை தடுக்காவிட்டால் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழி கழுமலை ஆறு பாசன வாய்க்காலில் கழிவுநீர் விடுவதை தடுக்காவிட்டால் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
பாசன வாய்க்கால்
சீர்காழியில் கழுமலை ஆறு பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் தேனூர், கொண்டல், வள்ளுவக்குடி, மருதங்குடி, ஆலஞ்சேரி, தத்தங்குடி, ெநம்மேலி, அகனி, தாடாளன் கோவில், சீர்காழி, தென்பாதி, திட்டை, தில்லைவிடங்கன், சிவநார்விளாகம், செம்மங்குடி, திருத்தோணிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்த நிலையில் கழுமலை ஆறு பாசன வாய்க்காலை பொதுப்பணித்துறையினர் முறையாக பராமரிக்காததால் தற்பொழுது செடி, கொடிகள் மண்டி புதர் போல் காணப்படுகிறது.
கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம்
மேலும் வர்த்தக நிறுவனம் மற்றும் குடியிருப்புகளில் உள்ள கழிவுநீரை பாசன வாய்க்காலில் விடுகின்றனர். இந்த கழிவுநீர் வயலுக்கு சென்றால் விவசாய பணியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தோல் நோய் உள்ளிட்ட சரும பிரச்சினைகள் ஏற்படுகிறது.இந்த கழிவுநீரால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரில் கொசுகள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இதை தொடர்ந்து பாசன வாய்க்காலில் கழிவுநீரை விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
முற்றுகை போராட்டம்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் வருவதற்குள் கழுமலை பாசன வாய்க்காலில் கழிவு நீர் விடுவதை தடுத்து தூர்வார வேண்டும். இல்லையென்றால் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
---