சிறை நிரப்பும் போராட்டம்
பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக்கோரி சிறை நிரப்பும் போராட்டம் அரசு ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
விழுப்புரம்
தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் சங்கத்தின் விழுப்புரம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொறுப்பாளர் மணி தலைமை தாங்கினார். ஆசிரியர் ராதா வரவேற்றார். நிர்வாகிகள் சேகர், ஜான்பீட்டர், தயாளன், ராஜலட்சுமி, முத்துலட்சுமி, சாரதாம்பாள், சுப்பிரமணியன், சந்திரசேகர், கலாவதி, லலிதா ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாநில தலைவர் மதுரை சங்கர்பாபு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு திட்டம், அகவிலைப்படி வழங்க வேண்டும், மேற்கண்ட கோரிக்கைகளை அரசு போர்க்கால அடிப்படையில் வருகிற 2023 நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்ற வலியுறுத்தி அடுத்த ஆண்டு(2023)பிப்ரவரி 1-ந் தேதி சென்னை சமூகநலத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ராஜாங்கம் நன்றி கூறினார்.