குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்படுத்திட வலியுறுத்தி போராட்டம்


குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்படுத்திட வலியுறுத்தி போராட்டம்
x

குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்படுத்திட வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்

பெயர் பலகை அமைக்க

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனையை தமிழக அரசின் அரசானையின்படி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்படுத்திட வலியுறுத்தி பல கட்சிகள் சார்பில் குளித்தலை அரசு மருத்துவமனை முகப்பில் கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை- குளித்தலை என்று பெயர் பலகை அமைக்கும் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி குளித்தலை சுங்ககேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டம்

இதில் இந்திய தேசிய காங்கிரஸ், பா.ஜ.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சியினர், தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுங்ககேட்டில் இருந்து குளித்தலை அரசு மருத்துவமனை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

69 பேர் கைது

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்தப் போராட்டத்தில் 4 பெண்கள் உள்பட 69 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் குளித்தலை பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்போராட்டம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பஸ்சில் இருந்து இறக்கப்பட்ட சிறுமி

குளித்தலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அரசு பஸ்களில் அவர்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு அரசு பஸ்சில் ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி ஆகிய 2 பேர் தங்கள் ஊருக்கு செல்வதற்காக ஏறி அமர்ந்தனர்.இதைப்பார்த்த பஸ்சில் அமர்ந்திருந்த பெண்களுடன் வந்த மற்றொரு பெண் பஸ்சில் அனைவரும் கைது செய்து ஏற்றப்படுவது பார்த்து உடனடியாக அந்த பெண்களை கீழே இறங்கச் சொல்லி குரல் கொடுத்தார். இதை அறிந்த போலீசார் அந்த பஸ்சை நிறுத்தி பஸ்சில் ஏறிய அந்த பெண் மற்றும் சிறுமியை இறக்கி விட்ட நிகழ்வு அங்கு சற்று நகைச்சுவை சம்பவமாக மாறியது.


Next Story