தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புசத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்
தர்மபுரி,:
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மடியேந்தி போராட்டம்
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தேவகி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் காவேரி, மாவட்ட பொருளாளர் வளர்மதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட செயலாளர் சேகர், ஜாக்டோ-ஜியோ நிதிகாப்பாளர் புகழேந்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்காமல் உள் கட்டமைப்பு வசதி கொண்ட சத்துணவு மைய ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக்கி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.
குறைந்தபட்ச ஓய்வூதியம்
ஓய்வுபெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.