சித்தோடு சாலை போக்குவரத்து கல்லூரியில் மாணவி தற்கொலை: பாதுகாப்பற்ற விடுதியில் விஷப்பூச்சிகள் புகுந்து விடும் அபாயம்; முதல்வர், விடுதி காப்பாளரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு


சித்தோடு சாலை போக்குவரத்து கல்லூரியில் மாணவி தற்கொலை:  பாதுகாப்பற்ற விடுதியில் விஷப்பூச்சிகள் புகுந்து விடும் அபாயம்;  முதல்வர், விடுதி காப்பாளரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு
x

சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், விடுதி விஷப்பூச்சிகள் வரும் அளவுக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் கல்லூரி முதல்வர் மற்றும் விடுதி காப்பாளரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

ஈரோடு

சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், விடுதி விஷப்பூச்சிகள் வரும் அளவுக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் கல்லூரி முதல்வர் மற்றும் விடுதி காப்பாளரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

ஐ.ஆர்.டி.டி. கல்லூரி

ஈரோடு அருகே சித்தோட்டில் சாலை போக்குவரத்து பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி (ஐ.ஆர்.டி.டி.) இயங்கி வருகிறது. தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையின் கீழ் இயங்கி வரும் இந்த கல்லூரியில், அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் படிக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

எனவே இங்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து மாணவ-மாணவிகள் வந்து படித்து வருகிறார்கள். அரசு கல்லூரிகளுக்கு இணையாக மதிப்பும் கல்வித்தரமும் கொண்ட இந்த கல்லூரி, தமிழகத்தின் தற்போதைய வீட்டுவசதித்துறை அமைச்சரும், தி.மு.க. ஈரோடு மாவட்ட செயலாளருமான சு.முத்துசாமியின் முயற்சியால் கொண்டு வரப்பட்டதாகும். அவர் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது சித்தோட்டில் இந்த கல்லூரியை கொண்டு வந்தார்.

26 பாடப்பிரிவுகள் கொண்ட இந்த கல்லூரி சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியில் அமைந்து உள்ளது. முழுவதும் மரங்கள் அடர்ந்த பசுமை கல்லூரி என்ற பெருமையுடன் விளங்கிறது.

மாணவி தற்கொலை

இங்கு 3-ம் ஆண்டு கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்த திருச்சியை சேர்ந்த மாணவி ஆர்.வர்சா, கடந்த 15-ந்தேதி இரவு கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது காதில் வண்டு ஒன்று புகுந்து அதனால் ஏற்பட்ட வலி தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் சித்ரா தனது புகார் மனுவில் கூறி இருந்தார்.

இதுதொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தநிலையில், இந்த வழக்கை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை (சி.பி.சி.ஐ.டி.) க்கு மாற்றி தமிழ்நாடு காவல்துறை தலைவர் (டி.ஜி.பி.) சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று ஈரோடு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.சங்கீதா வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினார். கோவை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் மற்றும் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

பாதுகாப்பு இல்லை

இந்தநிலையில் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரி விடுதி பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், விஷப்பூச்சிகள் வருவதற்கு தடை ஏதும் இல்லாத பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐ.ஆர்.டி.டி. கல்லூரி வளாகம் சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. இங்கு கல்லூரி வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் விடுதி கட்டிடங்கள் தவிர பிற பகுதிகள் முழுமையான வனப்பகுதிபோன்று உள்ளது. இங்கு விஷப்பூச்சிகள், வண்டுகள், பாம்பு உள்ளிட்டவை உலவுகின்றன. இப்படிப்பட்ட சுற்றுச்சூழலில் அமைந்திருக்கும் கல்லூரி விடுதியில் ஜன்னல்களின் பாதுகாப்பு வலைகள் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாமல் இருப்பதாக தெரியவந்து இருக்கிறது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கல்லூரியின் முதல்வர், விடுதி காப்பாளர் உள்பட பலரையும் விசாரிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் மீண்டும் நாளை (திங்கட்கிழமை) முதல் தீவிர விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.


Related Tags :
Next Story