கல்வி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


கல்வி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

கல்வி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை

சென்னை மேற்கு மாம்பலம் திருவள்ளுர் தெருவை சேர்ந்தவர் குமரேசன் (வயது 48). இவருடைய மகன் விக்னேஷ் (17). இவர் வில்லிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் அழகுகலை பயிற்சி மையம் ஒன்றில், அழகுகலை நிபுணருக்கு படித்து வந்தார். இந்த நிலையில், அழகு கலை நிபுணர் படிப்புக்கு ரூ.50 ஆயிரம் கட்டணத்தில் ரூ.20 ஆயிரத்தை தவணை முறையில் விக்னேஷின் பெற்றோர் கட்டியுள்ளனர். மீதி தொகை கட்டுவதற்கு கால அவகாசம் தேதி நெருங்கியதால் விக்னேஷ் தனது பெற்றோரிடம் கல்வி கட்டணம் செலுத்துமாறு கேட்டுள்ளார். இதனால், விக்னேஷின் பெற்றோர் உறவினர்களிடம் பண உதவிக் கேட்டனர். ஆனால், யாரும் பணம் கொடுக்கவில்லை. இதனால், விக்னேஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக வகுப்பிற்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறைக்கு சென்ற விக்னேஷ் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே, விக்னேஷின் நண்பர் நவீதாஸ் அவரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். நீண்ட நேரமாக அவர் அழைப்பை எடுக்காததால் விக்னேஷின் வீட்டிற்கு சென்று கதவை தட்டினார். கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த நவீதாஸ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு, விக்னேஷ் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இந்த சம்பவம் குறித்து குமரன் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரம் ஹவுசிங் போர்டு பிளாக்கை சேர்ந்தவர் பழனி. இவரது மகள் நிஷாந்தி (வயது 19). இவர் சென்னை கொத்தவால் சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று வீடு திரும்பிய நிஷாந்தி மாலை வயிற்று வலியாக இருப்பதாக தனது தாயிடம் கூறி தனக்கு ஜூஸ் வாங்கி வருமாறு கூறினார். தாய் கடைக்கு சென்ற நேரத்தில் நிஷாந்தி கதவை உள் தாழ்பாள் போட்டுக்கொண்டு படுக்கை அறையில் தூக்குப்போட்டு கொண்டார். ஜூஸ் வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்த தாய் கதவை தட்டினார். மகள் கதவை திறக்காததால் பதற்றம் அடைந்த தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது நிஷாந்தி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நிஷாந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி தற்கொலைகான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story