பூச்சிக்கொல்லி மருந்து குடித்த மாணவன் சாவு

பூச்சிக்கொல்லி மருந்து குடித்த மாணவன் சாவு
சேவூர்
திருப்பூர் அருகே குளிர்பானம் என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாணவன் சாவு
திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே கருமாபாளையத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி ஜமுனா. இவர்களது மகன் சஞ்சய் (வயது 11). அங்குள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை சஞ்சய் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு விளையாட சென்றான்.
அப்போது வீட்டில் ஒரு பாட்டிலில் இருந்த திரவத்தை குளிர்பானம் என நினைத்து குடித்துள்ளான். சிறிது நேரத்தில் அவனுக்கு மயக்கம் ஏற்படவே உடனடியாக அவனை அவினாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து சேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விழிப்புடன் இருக்க வேண்டும்
இதுகுறித்து போலீசார் கூறும்போது "சிறுவர், சிறுமிகள் இருக்கும் வீடுகளில், விஷத்தன்மை கொண்ட பொருட்களை, பாட்டில்களை, செடிகளுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை அவர்கள் கைக்கு எட்டும் வகையில் வைக்க கூடாது. பூச்சி மருந்தை எந்த காரணம் கொண்டும் வீட்டில் வைக்க கூடாது. அவற்றை வயல் வெளியில் வைத்து விட வேண்டும். எனவே பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றனர்.
---






