தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி சிகிச்சை பலனின்றி சாவு


தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி சிகிச்சை பலனின்றி சாவு
x

குனியமுத்தூரில் தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

போத்தனூர், ஜூன்.15-

குனியமுத்தூரில் தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

7-ம் வகுப்பு மாணவி

கோவையை அடுத்த மதுக்கரை சர்ச் காலனியை சேர்ந்தவர் பார்த்திபன். இவருடைய மனைவி சகாயராணி. இவர்களுக்கு சவுமியா (வயது13) என்ற மகள் இருந்தார். இவர் குனியமுத்தூரில் உள்ள நிர்மலா மாதா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையொட்டி சவுமியா நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்றார்.

மயங்கி விழுந்தார்

சவுமியா வகுப்பறையில் இருந்தபோது திடீரென 11 மணியளவில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவியை மீட்டு அருகில் உள்ள சங்கீதா என்ற தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் மாணவியின் பெற்றோருக்கும் ஆசிரியர்கள் தகவல் கொடுத்தனர்.

இதனால் மாணவியின் பெற்றோர் அலறி அடித்துக்கொண்டு பள்ளிக்கு வந்தனர். தொடர்ந்து மாணவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர்களிடம் தெரிவித்தாக தெரிகிறது.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்த நிலையில் மாலை 4 மணிக்கு மேல் சிறுமிக்கு இதய துடிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. இதையடுத்து சிறுமியை அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் முயன்றனர். ஆனால் அதற்குள் சிறுமி இறந்துவிட்டார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. இதையடுத்து மாணவிக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

டாக்டர்கள், ஆசிரியர்களின் அலட்சியம்

இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் கூறுகையில், எங்கள் மகள் சவுமியா பள்ளியில் மயங்கி விழுந்துவிட்டதாகவும், பள்ளியில் அமர வைத்திருப்பதாகவும் தகவல் தெரிவித்தனர். எங்கள் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதை எங்களிடம் தெரிவிக்கவில்லை. நீண்ட நேரத்திற்கு பின்னரே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினர்.

ஏதேனும் பிரச்சினை என்றால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்திருந்தால் கூட என் மகளை காப்பாற்றிருக்கலாம். அவசர சிகிச்சை பிரிவு கூட இல்லாத இந்த மருத்துவமனையில் சுயநினைவு இல்லாத குழந்தையை 5 மணி நேரம் வைத்துள்ளனர். டாக்டர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களின் அலட்சியத்தால் எங்கள் குழந்தை உயிரிழந்துவிட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

இந்த சம்பவம் குறித்து அறிந்த குனியமுத்தூர் சரக உதவி கமிஷனர் ரகுபதிராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவி இறந்தது தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மாணவி இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்த முதல் நாளில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story