மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி
ஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து மாணவர் பரிதாபமாக இறந்தார்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். அவருடைய மகன் நவீன் (வயது 14). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இவர், தனது வீட்டின் மாடியில் பந்தை வைத்து விளையாடி கொண்டிருந்தார். வீட்டின் பால்கனியில் பந்து விழுந்து விட்டது. அதனை அவர் எடுக்க முயன்றார்.
அப்போது, அருகில் சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் நவீன் மீது பாய்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே நவீன் பரிதாபமாக இறந்தார். மின்சார கம்பியில் உரசியபடி நவீன் பிணமாக இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மின்சாரத்துறை ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு, நவீன் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து சிறுவன், பலியான சம்பவம் ரெங்கசமுத்திரம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.