ஆட்டோ கவிழ்ந்து மாணவர் பலி: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் பண்ருட்டி அருகே பரபரப்பு


ஆட்டோ கவிழ்ந்து மாணவர் பலி: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் பண்ருட்டி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:45 PM GMT)

ஆட்டோ கவிழ்ந்து மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரி பண்ருட்டி அருகே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூர்

புதுப்பேட்டை,

பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகன் தமிழ்செல்வன்(வயது 21). இவர் கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பொியார் அரசு கலை கல்லூரியில் 3-ம் ஆண்டு இளங்கலை நுண்ணுயிரியல் படித்து வந்தார்.

நேற்று முன்தினம் கல்லூரி முடிந்ததும் தமிழ்செல்வன், அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 7 பேருடன் ஒரு ஆட்டோவில் கடலூர் பஸ் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார். சில்வர் பீச் ரோட்டில் உள்ள உப்பனாறு பாலம் தாண்டி வந்தபோது, திடீரென நாய் ஒன்று குறுக்கே சென்றது. இதில் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் லோகநாதன் ஆட்டோவை திருப்பினார். இருப்பினும் அந்த நாய் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழ்செல்வன் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.

ரூ.2 லட்சம் நிவாரணம்

இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தமிழ்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதற்கிடையே அந்த நாயும் பரிதாபமாக செத்தது. இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் மாணவர் தமிழ்செல்வனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் மணப்பாக்கத்திற்கு எடுத்து வரப்பட்டு, கிராம மக்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த மாணவர் தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு அரசு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தது.

சாலை மறியல்

இந்த நிலையில் அரசு அறிவித்த ரூ.2 லட்சம் நிவாரணம் போதாது என்றும், ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரியும் தமிழ்செல்வனின் உறவினர்கள், கிராம மக்கள் பண்ருட்டி-சேலம் மெயின் ரோட்டில் மணப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி தாசில்தார் ஆனந்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா மற்றும் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story