உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள்


உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள்
x

மதுரை மாவட்டத்தில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.

மதுரை

மதுரை,

மதுரை மாவட்டத்தில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.

பள்ளிகள் திறப்பு

தமிழகம் முழுவதும் முழு ஆண்டுத்தேர்வு கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று எல்.கே.ஜி. வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் 1,245 அரசுப்பள்ளிகள், 310 அரசு உதவி பெறும் பள்ளிகள், 609 சுயநிதி மழலையர், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. மழலையர் முதல் 10-ம் வகுப்பு வரை சுமார் 4 லட்சத்து 66 ஆயிரத்து 593 மாணவ, மாணவிகள் நேற்று பள்ளிக்கு வந்திருந்தனர்.

பள்ளி திறக்கப்பட்ட நேற்றைய தினமே 1,555 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் 2 லட்சத்து 59 ஆயிரத்து 233 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

விலையில்லா பாடப்புத்தகங்கள்

இதற்கிடையே, மதுரை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமோகூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் மாணவ, மாணவிகளை வரவேற்றார். அத்துடன் புதிதாக 15 மாணவர்களுக்கு கலெக்டர் சேர்க்கை அனுமதி வழங்கினார். மேலும், இப்பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 179 மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா உடன் இருந்தார். அவருடன் கல்வி மாவட்ட அலுவலர் உதயகுமார், வட்டாரக்கல்வி அலுவலர் ஜான்சி, பள்ளி தலைமைஆசிரியை கலைச்செல்வி, திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேல் குமரன் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மாணவ-மாணவிகள் ஆர்வம்

முன்னதாக, அனைத்து பள்ளிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. மாணவ, மாணவிகளுக்கு அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்திருந்தனர். அவர்களை ஆசிரியர்கள் இனிப்பு, சந்தனம், ரோஜாப்பூ கொடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஆனால், பெரும்பாலான மாணவர்கள் முகக்கவசம் அணியவில்லை. குறிப்பாக தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களும் முகக்கவசம் அணியாமல் இருந்தனர். முதல் ஒரு வாரத்துக்கு பள்ளிப்பாடங்கள் நடத்தாமல் மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஒரு சில பள்ளிகளில் அரசின் இந்த உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டு, பாடங்கள் நடத்துவதற்கு பதிலாக முந்தைய வகுப்பு பாடங்களை வீட்டுப்பாடங்களாக வழங்கியும் இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல, கல்விக்கட்டணத்தை பொறுத்தமட்டில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கட்டணம், வளர்ச்சிக்கட்டணம், கல்வி கட்டணம் என வசூலித்தனர். இதில், கல்விகட்டணத்தை தவிர பிற கட்டணங்கள் அனைத்தும் அவர்களின் நோக்கம் போல வசூலிக்கப்பட்டது. ஒரு சில பள்ளிகளில் பணம் செலுத்தியதற்கான ரசீதும் வழங்கப்படவில்லை என்று பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.


Related Tags :
Next Story