போதையால் பாதைமாறும் மாணவர் சமுதாயம்
போதையால் பாதைமாறும் மாணவர் சமுதாயம்
அனுப்பர்பாளையம்,
மனித வாழ்க்கை என்பது இலக்குநோக்கி பயணிப்பது... இலக்கை அடைய சரியான பாதையை தேர்வு செய்வது அவசியம். பாதை மாறினாலும், பாதை தவறி போனாலும் இலக்கு இருக்கும் இடமே தெரியாமல் ஆகிவிடும். அதை அடைவது சாத்தியமில்லை. எனவே துளிர் விடும் மாணவர் பருவத்தில் சரியான பாதையை தேர்வு செய்வது அவசியம். இன்றைய நவீன செல்போன், இணையதள உலகில் மாணவர்கள் செல்லும் பாதை என்பது நெருப்பை கடந்து செல்லும் பஞ்சுபோன்றது. பேதை உள்ளம் மாயைக்குள் மயங்கி விட்டால் சாலைைய கடப்பதே சங்கடமாகி விடும்.
இன்றைய மாணவர் சமுதாயம் நாளைய இந்தியாவின் எதிர்காலம். அந்த வகையில் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும், குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாணவனின் பங்கும் முக்கியமானதாகும். ஆனால் சமீப காலமாக கஞ்சா, மது, புகையிலை போன்ற போதை பொருட்களால் இன்றைய இளம் தலைமுறையினரும், மாணவர் சமுதாயமும் சீரழிந்து சின்னாபின்னமாகி வருகிறது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பலர் கஞ்சாவுக்கும், மதுவுக்கும் அடிமையாகி வாழ்க்கையை சீரழித்துக்கொள்கிறார்கள். இதுபோன்ற தவறான பழக்கவழக்கத்திற்கு ஆளாகும் மாணவர்கள் பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதை பொருட்களை பயன்படுத்துவது, ஆசிரியர்களை கேலி செய்வது, தாக்குவது போன்ற அநாகரீகமான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க போதிய விழிப்புணர்வு இல்லாததால் பள்ளி மாணவர்களும், மாணவிகளும் பிஞ்சில் பழுத்ததுபோல் அறியா வயதில் காதல் என்ற வலையில் விழுந்து சிக்கலில் சிக்கிக்ெகாள்கிறார்கள். தொழில் நகரமான திருப்பூரை பொறுத்தவரை போலீஸ் நிலையங்களில் அடிக்கடி பள்ளி, கல்லூரி மாணவிகள் காணவில்லை என்று வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இதேபோல் அரசு பள்ளிகளில் படிக்கும் கஞ்சாவை பயன்படுத்தும் மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாநகரில் கடந்த 1 ஆண்டாக சங்கிலி, செல்போன் பறிப்பு, வாகனம் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். இதில் பலர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்பது அதிர்ச்சியான தகவலாகும்.
கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்பிற்காக மாணவர்கள் செல்போனை பயன்படுத்தியது, சிறுவர்-சிறுமிகளும், மாணவ-மாணவிகளும் தடம் மாறி செல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சமூக வலைத்தளத்தை திறந்தவுடன் உணர்ச்சியை தூண்டும் கவர்ச்சி படங்களால் கவரப்பட்டு, கூண்டுக்குள் எலி சிக்கியது போல் சிக்சிக்கொள்கிறார்கள். வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களே மாணவர்களும், இளைஞர்களும் தடம் மாறி செல்வதற்கும், தவறான பாதைக்கு செல்வதற்கும் காரணமாக உள்ளது. இதே நிலை நீடித்தால் மாணவர்கள் மற்றும் இன்றைய இளம் தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே பள்ளி, கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் ஆசிரியர்கள் மட்டுமின்றி, குடும்பத்தில் பெற்றோர்களும் சரியாக கண்காணித்து, அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இன்றைய இளம் தலைமுறையினர் தடம் மாறி செல்வதை தடுக்க சரியான தீர்வாகும்.