பஸ் வசதி கேட்டு மாணவர்கள் சாலைமறியல்

ஏரியூர் அருகே பஸ் வசதி கேட்டு மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஏரியூர்
பஸ் வசதி
ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,500 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு வந்து செல்ல மாணவ- மாணவிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் சீலநாயக்கனூர், மணியக்காரன் கொட்டாய், சிடுவம்பட்டி, புளியமரத்தூர், பழையூர், சாம்பள்ளி, மேட்டூர் கொட்டாய், ஊர் நத்தம், ஆலமரத்து கொட்டாய், தாளப்பள்ளம், புதுக்காடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் பள்ளிக்கு மாணவ- மாணவிகள் வந்து செல்கின்றனர்.
எனவே பஸ் வசதி கேட்டு மாணவ- மாணவிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அப்படி இருந்தும் அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
சாலைமறியல்
இதற்கிடையே சீலநாயக்கனூர் பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் நேற்று காலையில் திடீரென அந்த வழியாக வந்த பஸ்சை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டம் நடத்திய மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்காலிமாக மாணவ- மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பென்னாகரம் முதுகம்பட்டி- ஏரியூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






