அரசு பஸ் கண்ணாடியை மாணவர்கள் உடைத்ததால் பரபரப்பு


அரசு பஸ் கண்ணாடியை மாணவர்கள் உடைத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே கூட்ட நெரிசலில் ஏறமுடியாததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்

மாணவர்கள் சிரமம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொங்கராயநல்லூர், பையூர், சேத்தூர், பையூர் மேடு, சிறுமதுரை, தொட்டி குடிசை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருவெண்ணெய்நல்லூர், ஏமப்பூர், காந்திக்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு பஸ்களில் சென்று படித்து வருகிறார்கள்.

தினமும் காலை 7.30 மணி மற்றும் 8.15 மணி ஆகிய வேளைகளில் இரண்டு அரசு பஸ்கள் மட்டும் வந்து செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர்.

கண்ணாடி உடைப்பு

இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் கொங்கராயனூரிலிருந்து விழுப்புரம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பையூர் பஸ் நிறுத்தத்தில் நின்றபோது கூட்ட நெரிசலை பொருட்படுத்தாமல் மாணவர்கள் பஸ்சில் ஏறினர். சில மாணவர்கள் பஸ்சில் ஏற முடியாமல் தவித்தனர்.

இதற்கிடையே பஸ் அங்கிருந்து புறப்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கருங்கற்களால் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதையடுத்து டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தினார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் மாணவர்களிடம் சமாதானம் பேசி பிரச்சனையை சரி செய்தனர். பின்னர் அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story