உற்சாகத்துடன் வகுப்பறைக்கு வந்த மாணவ-மாணவிகள்


தஞ்சை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் வகுப்பறைக்கு உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகளுக்கு பூக்கள்-சாக்லெட் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் வகுப்பறைக்கு உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகளுக்கு பூக்கள்-சாக்லெட் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொதுத்தேர்வு முடிவடைந்தவுடன் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்ததால் பள்ளிகள் திறப்பு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது. நேற்று கோடை விடுமுறை முடிவடைந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 450-க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டன.

6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு வந்தனர். இதற்காக பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு மேஜை, பெஞ்சுகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில் வகுப்புகள் காலை 9 மணிக்கு இறைவணக்கத்துடன் தொடங்கப்பட்டது. இதையொட்டி காலை 8 மணி முதலே மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வரத்தொடங்கினார்கள்.

சாக்லெட்

முதல் நாள் என்பதால் பெரும்பாலான மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் அழைத்து வந்து பள்ளிகளில் விட்டு சென்றனர். பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவிகள் பெட்டி படுக்கைகளுடன் வந்தனர். முதல் நாளில் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர், ஆசிரியைகள் சாக்லெட் மற்றும் பூக்கள் கொடுத்து வரவேற்றனர். வகுப்புகளில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளிடையே ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தி கொண்டனர். சில மாணவர்கள் பெற்றோரை விட்டு பிரிய மனமில்லாமல் பள்ளிக்கூட வாசலில் நின்று உள்ளே செல்ல மறுத்து அடம் பிடித்தனர். அவர்களை சமாதானப்படுத்தி வகுப்பறைக்குள் அனுப்பி வைத்தனர். மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை ஆசிரியர்கள் வழங்கினர். எழுதுபொருட்கள், நோட்டு உள்ளிட்ட விலையில்லா பொருட்களும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இவற்றை பெற்று கொண்ட மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வகுப்பறையில் இருந்தனர்.

மகிழ்ச்சி

இது குறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், "நாங்கள் கடந்த கல்வி ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறையை கொண்டாடினோம். சுற்றுலா தலங்கள், உறவினர்கள் வீடுகளுக்கு சென்று வந்தோம். தற்போது பள்ளிகள் மீண்டும் திறந்து இருப்பதால், அடுத்த வகுப்புக்கு செல்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. மீண்டும் நண்பர்களை சந்தித்து பேசியது ஆனந்தத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கு வந்த எங்களை விதவிதமாக ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தது உற்சாகத்தை கொடுத்துள்ளது'' என்றனர்.


Next Story