'கிளாட்' நுழைவு தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
சட்ட பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான ‘கிளாட்’ நுழைவு தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் நான் முதல்வன் திட்டத்தில் தேசிய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் தலைசிறந்த 22 சட்ட பல்கலைக்கழகங்களில் சட்ட படிப்புகளில் சேருவதற்கான 'கிளாட்' எனும் நுழைவு தேர்வு வருகிற டிசம்பர் 3-ந்தேதி நடத்தப்படுகிறது.
இந்த பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை சட்ட படிப்புகளில் சேருவதற்கு 'கிளாட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். அதற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.4 ஆயிரமும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ரூ.3 ஆயிரத்து 500-ம் செலுத்த வேண்டும். 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எல்.எல்.பி. மற்றும் எல்.எல்.எம். ஆகிய படிப்புகளுக்கு அந்த தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் திருச்சியில் ஒரு தேசிய சட்டப்பல்கலைக்கழகம் உள்ளது. அதேபோல் தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கிளாட் நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்த 'கிளாட்' தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பிளஸ்-2 பயிலும் மாணவர்கள், பிளஸ்-2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 111 பேர் 'கிளாட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் விருப்பமுள்ள மாணவர்கள், அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதிக்குள் http://consortiumofnlus.ac.in எனும் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் தெரிவித்துள்ளார்.