திருவெண்ணெய்நல்லூர் கல்லூரி சாலை தரமற்று போட்டிருப்பதாக மாணவர்கள் புகார்
திருவெண்ணெய்நல்லூர் கல்லூரி சாலையை தரமற்று போட்டிருப்பதாக மாணவர்கள் புகார் கூறியதையடுத்து கலெக்டர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருவெண்ணெய்நல்லூர்:
திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்பட்டது. புதிய சாலை அமைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி சின்னசெவலை முதல் மணக்குப்பம் வரை கல்லூரிக்கு செல்லும் சாலை ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.54 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த சாலை தரமற்ற முறையில் போடப்பட்டு இருப்பதாக மாணவர்கள் வாட்ஸ்-அப் மூலம் விழுப்புரம் கலெக்டர் மோகனுக்கு புகார் அனுப்பினர்.
இதையடுத்து கலெக்டர் மோகன் நேற்று நேரில் சென்று சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது தொழில் நுட்ப வல்லுநர்கள், சாலையின் ஓரிடத்தில் வெட்டி சாலை அமைப்பதற்கான இடுபொருட்கள் சரியான விகிதாசாரத்தில் உள்ளதா?, அதன் உறுதி தன்மை குறித்து பார்த்தனர்.
ஆய்வு
இதேபோல் ஏனாதிமங்கலம் முதல் மாரங்கியூர் இடையே கோரையாற்றின் குறுக்கே ரூ.24 லட்சம் மதிப்பில் தரைப்பாலம் கட்டுமான பணி, மூலக்குளம்- குச்சிபாளையம் சாலை பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் வெண்ணிலா, திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தேவராஜன், உதவி பொறியாளர் சோமசுந்தரம் உள்பட பலர் உடனிருந்தனர்.
அரகண்டநல்லூர் பாலம்
அரகண்டநல்லூர் பச்சையம்மன் கோவில் அருகில் ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் பாலம் கட்டப்பட்டுள்ளது. பணி முடிவடைந்த நிலையில் இந்த பாலம் வழியாக வாகன போக்குவரத்து தொடங்கலாமா? என்று கலெக்டர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவசேனா, உதவி செயற்பொறியாளர் தன்ராஜ், உதவி பொறியாளர் வசந்தபிரியா மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் இன்னும் ஒரு சில தினங்களில் இவ்வழியாக போக்குவரத்தை இயக்குவது குறித்து அறிவிப்பு வெளியிட முடிவு செய்யப்பட்டது. அப்போது ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் அ.சா.ஏ.பிரபு, கண்டாச்சிபுரம் ஜி.ரவிச்சந்திரன், அரகண்டநல்லூர் நகர தி.மு.க. செயலாளர் ஆர்.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.