கோவையில் யோகா பயிற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்
உலக யோகா தினத்தையொட்டி கோவையில் நடைபெற்ற யோகா பயிற்சியில் மாணவ-மாணவிகள் ஆர்வத் துடன் பங்கேற்றனர்.
கோவை
உலக யோகா தினத்தையொட்டி கோவையில் நடைபெற்ற யோகா பயிற்சியில் மாணவ-மாணவிகள் ஆர்வத் துடன் பங்கேற்றனர்.
உலக யோகா தினம்
உடல், மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒருமுகப்படுத்துவதே யோகா கலை ஆகும். தினமும் யோகா செய்யும்போது உணர்வுகளை கட்டுப்படுத்தி, மன அழுத்தங்களை குறைத்து அமைதி தருகிறது. இதனால் பெரும்பாலானோர் காலை எழுந்ததும் யோகா செய்து வருகிறார்கள்.
இந்த யோகா கலையை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று உலக யோகா தினம் என்பதால், பல்வேறு பகுதிகளில் யோகா பயிற்சி செய்யப்பட்டது.
போலீசார் பயிற்சி
கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று காலை யோகா பயிற்சி நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், ஆயுதப்படை போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.
பின்னர் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, உலக சேவா மையமும், முன்னாள் போலீஸ் அதிகாரிகளும் இணைந்து போலீசாருக்கு யோகா பயிற்சி வழங்கினர். இதில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் மூச்சுப்பயிற்சி, தியான பயிற்சி செய்வதன் மூலம் பணியின் போது ஏற்படும் மனஅழுத்தங்களை குறைப்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. அத்துடன் இந்த பயிற்சியை செய்வது எப்படி என்பது குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டது என்றார்.
டாக்டர்கள், செவிலியர்கள்
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டீன் நிர்மலா தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள் ஊழியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.
அதுபோன்று கோவை அரசு கலைக்கல்லூரியில் நடந்த பயிற்சியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர். இதில் யோகா பயிற்சி செய்வதன் முக்கியத்துவம், அதன் மூலம் கிடைக்கும் நன்மை குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
கோவை உக்கடம் பெரியகுளக்கரையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது, யோகா கலையின் மூலம் உடலுக்கு அதிக ஆரோக்கியம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் கோவை மாநகரத்தில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் யோகா பயிற்சி மேற்கொள்ள வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் அரசு பள்ளிகளில் யோகா பயிற்சியை கட்டாயமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
வேளாண் பல்கலைக்கழகம்
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் கீதாலெட்சுமி தலைமையில் யோகா பயிற்சி நடத்தப்பட்டது. இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.
இதுதவிர பள்ளிகள், கல்லூரிகள், தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு பகுதிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.