பஸ் படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள்


பஸ் படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள்
x
தினத்தந்தி 13 July 2023 5:22 PM GMT (Updated: 14 July 2023 7:48 AM GMT)

செங்கத்தில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்களை கண்டித்த கண்டக்டருக்கு மிரட்டல் விடுத்தனர்.

திருவண்ணாமலை

செங்கம்

செங்கத்தில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்களை கண்டித்த கண்டக்டருக்கு மிரட்டல் விடுத்தனர்.

மாணவ-மாணவிகள்

செங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக பஸ் சேவை பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் கிராமப்புறங்களில் இருந்து செங்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அதிகளவில் அரசு பஸ்சில் பயணம் செய்கின்றனர்.

அதேபோல செங்கம் அருகே உள்ள மேல்பள்ளிப்பட்டு அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளும் செங்கத்தில் இருந்து மேல்பள்ளிப்பட்டு பகுதிக்கு அரசு பஸ்சில் பயணம் செய்கின்றனர்.

கும்மாளம்

அரசு பஸ்சில் பயணம் செய்யும் அரசு பள்ளி மாணவர்கள் இருக்கைகள் காலியாகவே இருந்தாலும் அங்கு அமராமல் படிக்கட்டில் தொங்கியவாறும், தரையில் கால் தேய்த்தபடி பாடல்கள் பாடிக்கொண்டு கும்மாளம் அடித்துக் கொண்டு செல்கின்றனர்.

இதனால் பொதுமக்களுக்கும், பஸ்சில் பயணம் செய்யும் நபர்களுக்கும், டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு இடையூறாக உள்ளது.

இந்த நிலையில் இன்று அரசு பஸ்சில் தொங்கியவாறு படிக்கட்டில் நின்று பயணம் செய்த மாணவனை உள்ளே செல்லும்படி கண்டக்டர் கூறி உள்ளார். அப்போது அந்த மாணவன் மிரட்டல் தொனியில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பயப்பட மாட்டேன்

இதுகுறித்து வீடியோ எடுத்த கண்டக்டரிடம் அந்த மாணவன், நீ வீடியோ எடு, நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என சவால் விடுக்கும் வகையில் மாணவன் பேசியுள்ளான்.

மேலும் கண்டக்டரை எச்சரிக்கை செய்து, மேலே கை வைக்கும் வேலையெல்லாம் வைத்துக் கொள்ளாதே என பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

இதுபோன்று பஸ் படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்யும்போது ஏதேனும் விபரீதம் ஏற்படுவதை தவிர்க்கவும் அவ்வாறு தொங்கியபடி பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது போலீசாரும் பள்ளி கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story