அழிந்து வரும் தொல்லியல் தடயங்களை மாணவர்கள் பாதுகாக்க வேண்டும்


அழிந்து வரும் தொல்லியல் தடயங்களை மாணவர்கள் பாதுகாக்க வேண்டும்
x
தினத்தந்தி 6 July 2023 6:45 PM GMT (Updated: 6 July 2023 6:46 PM GMT)

அழியும் நிலையில் உள்ள தொல்லியல் தடயங்களை மாணவர்கள் கண்டறிந்து பாதுகாக்க வேண்டும் என கல்வி அதிகாரி வேண்டுகோள் விடுத்தார்.

ராமநாதபுரம்

அழியும் நிலையில் உள்ள தொல்லியல் தடயங்களை மாணவர்கள் கண்டறிந்து பாதுகாக்க வேண்டும் என கல்வி அதிகாரி வேண்டுகோள் விடுத்தார்.

தொல்லியல் ஆய்வு

நயினார்கோவில் வட்டாரத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றம் தொடக்க விழா மற்றும் தொல்பொருட்கள் கண்காட்சி பாண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நயினார்கோவில் வட்டார கல்வி அலுவலர் வாசுகி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். பாண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவி அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் வாசுகி பேசுகையில், தொன்மை பாதுகாப்பு மன்றம் மூலம் மாணவர்கள் தங்கள் பகுதியில் அழியும் நிலையில் உள்ள தொல்லியல் தடயங்களை கண்டறிந்து பாதுகாக்க உதவ வேண்டும், தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, வரலாறு, தொல்லியலை பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும், பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தவும் நயினார்கோவில் வட்டாரத்திலுள்ள நடுநிலைப்பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பயிற்சி

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்ட தொன்மை பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளரும், தொல்லியல் ஆய்வாளருமான ராஜகுரு, பள்ளி மாணவர்களிடையே தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தொல்பொருட்களின் அவசியம் குறித்து கற்றுத்தரவும் தமிழ்நாடு அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சியை அளித்து வருகிறது.

தொல்லியல் குறித்து அறிந்துகொண்ட மாணவர்கள், தங்கள் பகுதிகளில் அழிந்து போகும் நிலையில் உள்ள தொல்லியல் இடங்கள், சின்னங்களை கண்டறிந்து பாதுகாக்க உதவவேண்டும் என்று கேட்டு கொண்டார். முடிவில், தேர்த்தங்கால் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகலெட்சுமி நன்றி கூறினார்.

தொல்பொருட்கள்

இந்த நிகழ்ச்சியினை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்து அனைத்து பள்ளிகளிலும் இம்மன்றத்தை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என கேட்டு கொண்டார். பின்னர் நடந்த தொல்பொருட்கள் கண்காட்சியில் பழைய, புதிய, நுண்கற்கால கருவிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், ரோமானிய, சீன நாட்டு பானை ஓடுகள், இரும்புத்தாதுக்கள், இரும்பு கழிவுகள், வட்ட சில்லுகள், கூரை ஓடுகள், மான் கொம்புகள், பானை குறியீடுகள், புதைபடிமங்கள், கல்வெட்டுகளின் மைப்படிகள், ஓலைச்சுவடிகள், எழுத்தாணிகள் ஆகியவை காட்சிபடுத்தப்பட்டிருந்தன. நயினார்கோவில் வட்டார தொன்மை பாதுகாப்பு மன்றங்களின் பொறுப்பாசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.


Next Story