எதிர்கால தொழில் வளர்ச்சிக்கேற்ப மாணவர்கள் திறனை மேம்படுத்த வேண்டும்-கலெக்டர் கார்மேகம் பேச்சு


எதிர்கால தொழில் வளர்ச்சிக்கேற்ப மாணவர்கள் திறனை மேம்படுத்த வேண்டும்-கலெக்டர் கார்மேகம் பேச்சு
x

எதிர்கால தொழில் வளர்ச்சிக்கேற்ப மாணவர்கள் திறனை மேம்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கார்மேகம் பேசினார்.

சேலம்

சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் "நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்" என்ற கருப்பொருளை மையமாக கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசியதாவது:-

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆய்வகம், பொறியியல் கல்லூரிகளை மிஞ்சும் அளவிற்கு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகங்களுக்கு பள்ளி மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து வந்து இன்றைய நவீன காலத்திற்கேற்ப தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை எடுத்துரைக்க வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் தலைசிறந்த தொழில்நுட்பவியாளர்களை உருவாக்கிட முடியும்.

மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட்டு வரும் தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப பெண் பயிற்சியாளர்களின் சேர்க்கை விகிதம் அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சி முடித்தவுடன் பயிற்சியாளர்களின் நலன் கருதி முன்னணி நிறுவனங்களுடன் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும். தொழிற்பயிற்சி கல்வி படிக்கும் மாணவ, மாணவிகள் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கேற்ப தங்கள் திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தொழிற்பயிற்சி நிலைய இணை இயக்குனர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story