3 கிலோ மீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்து செல்கிறோம்பஸ் வசதி கேட்டு கலெக்டரிடம் மாணவர்கள் மனு
சேலம்
3 கிலோ மீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்து செல்வதால் பஸ் வசதி கேட்டு கலெக்டரிடம் மாணவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
பஸ் வசதி வேண்டும்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மொத்தம் 354 மனுக்கள் பெறப்பட்டன. கெங்கவல்லி தாலுகா கூடமலை அருகே சித்தன்பட்டி பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் கார்மேகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் எங்களது கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் ஊரில் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளதால் மேல் படிப்புக்காக கூடமலை செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் பஸ் வசதி இல்லாததால் 3 கிலோ மீட்டர் தூரம் வரை பள்ளிக்கு நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பஸ், சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவில் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வகுப்பறை கட்டிடம்
கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் கைகளில் பதாகைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிட வசதி, சுகாதார வளாக வசதி இல்லை. மேலும் மாணவர்கள் வளாகத்தில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் காலியாக உள்ளது. இதனால் மாணவர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி அடிப்படை வசதிகள் நிறைவேற்றவும், இந்த உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்றனர்.
சமுதாய நலக்கூடம்
சேலம் அருகே மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்தனர். அதில் மேட்டுப்பட்டி தாதனூர் சந்தியா காலனியில் உள்ள அரசு நிலங்களில் சமுதாய கூடம் மற்றும் மயானம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு மனு கொடுப்பதற்காக ஏராளமானவர்கள் வந்தனர். அப்போது அவர்கள் இலவச வீட்டுமனை கேட்டு அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். இதையடுத்து கோரிக்கை மனுக்களை அவர்கள் அதிகாரிகளிடம் வழங்கினர்.