கவுரவ விரிவுரையாளரை கைது செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம்

கவுரவ விரிவுரையாளரை கைது செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
ஆபாச குறுந்தகவல்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூரில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் வினோத்குமார்(வயது 33) என்பவர் வணிகவியல்துறை கவுரவ விரிவுரையாளராக கடந்த 1½ மாதமாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் ஒரு மாணவிக்கு ஆபாசமாக குறுந்தகவல் மெசேஜ் அனுப்பியதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்கள், கவுரவ விரிவுரையாளர் வினோத்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இந்நிலையில் கல்லூரி அலுவலர்கள் கொடுத்த தகவலின்பேரில் லால்குடி கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் விக்னேஷ், போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் உதயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கல்லூரிக்கு விரைந்து சென்று மாணவ, மாணவிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் விரிவுரையாளர் வினோத் குமாரை லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் மாணவியின் புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இது குறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






