செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள பொள்ளாச்சியில் மாணவ-மாணவிகள் தேர்வு

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள பொள்ளாச்சியில் மாணவ-மாணவிகள் தேர்வு நடைபெற்றது.
பொள்ளாச்சி
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள பொள்ளாச்சியில் மாணவ-மாணவிகள் தேர்வு நடைபெற்றது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி
இந்தியாவிலேயே முதன் முறையாக 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றிய அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. இதற்கு பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் வெங்கடேஷ்வரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஷ் முன்னிலை வகித்தார்.
போட்டியை நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். இதில் வடக்கு, தெற்கு ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினர். இதில் பள்ளி கல்வி துணை ஆய்வாளர் ஜெயசந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தனலட்சுமி, மேலாண்மை குழு உறுப்பினர் வெள்ளை நடராஜ், பொள்ளாச்சி சதுரங்க சங்க செயலாளர் பரமேஸ்வரன், உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் புனிதன் நன்றி கூறினார்.
இதுகுறித்து கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மாவட்ட அளவில் தேர்வு
சென்னை மாமல்லபுரத்ததில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதில் மாணவ-மாணவிகள் கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக ஏற்கனவே பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு ஒன்றிய அளவில் போட்டிகள் நடைபெற்றது. வடக்கு, தெற்கு ஒன்றியங்களுக்கு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போட்டிகள் நடைபெற்றது. இதேபோன்று ஆனைமலை, வால்பாறையில் போட்டிகள் நடத்தப்பட்டது.
பொள்ளாச்சியில் நடந்த போட்டியில் வடக்கு ஒன்றியத்தில் 25 பள்ளிகளில் இருந்து 100 பேரும், தெற்கு ஒன்றியத்தில் 27 பள்ளிகளில் இருந்து 105 பேரும் கலந்துகொண்டனர். 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 6 முதல் 8, 9 முதல் 10, 11 முதல் 12-ம் வகுப்பு என போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவுகளில் இருந்தும் 2 பேர் தேர்வு செய்யப்பட்டு கோவையில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள். இதில் தேர்வு செய்யப்படும் மாணவ- மாணவிகள் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






