மாணவ-மாணவிகள் ஒளி விளக்காக இருக்க வேண்டும்

தமிழ் மொழிக்கு மாணவ, மாணவிகள் ஒளிவிளக்காக இருக்க வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசினார்.
தமிழ் கனவு நிகழ்ச்சி
காட்பாடியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஜெயசாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராமச்சந்திரன், மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பெண்மை போற்றுதும் என்ற தலைப்பில் பேசினார்.
மாணவ, மாணவிகளுக்கு பரிசு சான்றிதழ்களை வழங்கி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஒளி விளக்காக
தமிழக அரசு சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக மாபெரும் தமிழ் கனவு என்ற நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் எழுச்சி தமிழை அறிவதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தாய்மொழியான தமிழை இன்னும் 50 ஆண்டுகளுக்கு நீங்கள் முன்னேற்றி செல்ல வேண்டும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழி இருந்துள்ளது. தமிழ் இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்றவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியுள்ளது. கல்வி கற்று
சிறந்தவர்களே முன்னேறியவர்கள் என்று சங்க கால இலக்கியங்கள் தெரிவித்துள்ளது. சமுதாயத்தில் தமிழ் சிறப்பிடம் கொண்டுள்ளது. தமிழ்மொழி சிந்தனைகளை வருங்காலத்தினருக்கு நாம் விட்டு செல்ல வேண்டும். காலம் முழுவதும் தமிழ் மொழிக்காக பாடுபட வேண்டும். தமிழ்மொழிக்கு மாணவ, மாணவிகள் ஒளிவிளக்காக இருக்க வேண்டும். இதற்காகத்தான் அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.






