கல்வி அறிவுடன் பொது அறிவையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்
கல்வி அறிவுடன் பொது அறிவையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என சின்னசேலம் அரசு மாதிரி பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறினார்
சின்னசேலம்
அரசு மாதிரிப்பள்ளி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக தொடங்கப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளியில் படித்துவரும் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார்.
இதில் கலெக்டர் ஷ்ரவன் குமார் பேசியதாவது:-
முழு கவனம் செலுத்தி
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் தரமான கல்லூரிகளை தேர்வு செய்து உயர்கல்வி படித்து உயர் பதவிகளை அடைய வைக்கும் நோக்கத்தில் இந்த மாதிரி பள்ளியை தமிழக அரசு தொடங்கி உள்ளது.
நீங்கள் முழு கவனத்தை செலுத்தி படித்தால் உயர்கல்வியின் மூலம் உயர்வான வாழ்க்கை நிலையை அடைய முடியும். கல்வி அறிவுடன் பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு செய்திகளை, பொது அறிவு புத்தகங்களை படிக்க வேண்டும். நானும் உங்களைப்போல கிராமப்புறத்தில் இருந்து படித்து உங்கள் முன் கலெக்டராக நிற்கிறேன். அதேபோல நீங்களும் விரும்பிய துறையை தேர்வு செய்து பொது அறிவை வளர்த்து கொண்டு போட்டி தேர்வுகளை எழுதி உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களிடம் கலந்துரையாடல்
பின்னர் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என ஆசிரியர்களை கேட்டுக் கொண்ட கலெக்டர் பாடத்திட்டம் மற்றும் பொது அறிவுத்திறன் சம்பந்தமாக மாணவர்களுடன் நேருக்கு நேர் கலந்துரையாடினார். தொடர்ந்து அவரிடம் மாதிரி பள்ளிக்கு கட்டிடம் கட்ட இடம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனுவை ஆசிரியர்கள் வழங்கினர். இதில் தாசில்தார் இந்திரா, வருவாய் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் தர்மராஜ் நாகராஜ் மற்றும் சிறப்பாசிரியர் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் மணி நன்றி கூறினார்.